குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் குடும்பங்களை ஆதரிக்கும் நோக்கில், அவர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (20) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தற்போது ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் பல்வேறு உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளின் கல்வி தேவைகளுக்காக புதிய நிதியுதவி திட்டம் ஒன்றை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லொத்தர் விற்பனையாளர்கள் நாட்டின் லொத்தர் வருவாயை உயர்த்த முக்கிய பங்காற்றி வருவதாகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த கல்வி உதவித் திட்டத்தை பிரதேச செயலகங்கள் மூலம் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையும் இந்த திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.








