மீகொடை பகுதியில் தான்சல் பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனமே, மீகொடை பகுதியில் தான்சலுக்காக காத்திருந்த மக்கள் மீது மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்துக்குப் பின்னர் தப்பிச் சென்ற வாகன சாரதி, கொடகம சந்திப் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த வேளையில் சாரதி மது போதையில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








