வவுனியா குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்ததுடன் “கௌரி ஜுவல்லர்ஸ்” என்ற பெயரில் நகை வியாபாரம் மேற்கொண்ட வர்த்தகர் ஒருவர், பல வர்த்தகர்களிடமிருந்து 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கடனாகப் பெற்றுக்கொண்டு குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நகை வியாபாரி ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின்படி, இளையதம்பி சுகுமார் (41) என்பவரே தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வவுனியாவில் பல நகைக் கடைகளுக்கு நகைகள் விநியோகம் செய்ததுடன், நகை வியாபாரிகளுடன் பல்வேறு நிதி மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளிலும் அவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக தகவல்கள் அறிந்தவர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரை அல்லது 077 410 1802 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









