வெசாக் விடுமுறையை முன்னிட்டு கடந்த மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 19 வீதி விபத்துகளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், குறித்த இரு தினங்களில் 29 பாரதூரமான விபத்துகள், 96 சிறிய விபத்துகள் மற்றும் 19 சொத்து சேதங்களை ஏற்படுத்திய விபத்துகள் பதிவாகியுள்ளதாக கூறினார்.
இந்த விபத்துகளில் 15 மோட்டார் சைக்கிள்கள், 3 முச்சக்கரவண்டிகள், 2 லொறிகள், 2 தனியார் பேருந்துகள் மற்றும் ஒரு கெப் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் தொடர்புபட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் 13 பாதசாரிகள், 7 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்த ஒருவர், ஒரு மிதிவண்டி ஓட்டுநர், ஒரு சாரதி மற்றும் ஒரு பயணி அடங்குவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
வீதி விபத்துகளை குறைக்கும் நோக்கில் சாரதிகளும் பாதசாரிகளும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.








