வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியில் உள்ள வீட்டொன்றில் 1 கோடியே 15 லட்சம் ரூபா பணத்தை திருடியதாக குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி பகல் வேளையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளே நுழைந்து இவர்கள் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து, CCTV காட்சிகளை ஆய்வு செய்ததன் மூலம் சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். ஒருவர் வல்லைச் சந்திப் பகுதியில் மற்றும் மற்றொருவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளில், பணத்தை கண்டதும் சந்தேகநபர்கள் அதனை நெடுங்கேணியில் உள்ள ஒருவருக்கு வீடியோ அழைப்பு மூலம் தெரிவித்ததாகவும், பின்னர் அவரது ஆலோசனையின்படி பணத்தை அங்கு கொண்டு சென்று காணி ஒன்றில் புதைத்து வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.
பின்னர் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், திருடப்பட்ட பணத்தில் 74 இலட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொரு சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








