குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்களில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அங்கு வரவிருந்த விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளன.
தாக்குதலால் விமான நிலையத்தின் டி1 முனையக் கட்டடம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக குவைத் பொது சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னதாக, குவைத் நோக்கி ஈரானால் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் இலக்கை அடையாமல் நடுவழியில் செயலிழந்ததாகவும், பஹ்ரைனை இலக்கு வைத்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் பாதுகாப்புப் படைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்திருந்தது.
மேலும், ஈரானின் பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் இலக்கை அடையாமல் முறியடிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் கூறியுள்ளது.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகள் கெஷ்ம் தீவில் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், பல ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








