புத்தளம் – ரத்மல்யாய பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்ததாகக் கூறப்படும் சிறுவனை சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றுமாறு புத்தளம் மாவட்ட நீதவான் நேற்று (03) உத்தரவிட்டார். அத்துடன், சந்தேக நபரை ஜூன் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் ஆணையிடப்பட்டது.
கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி புத்தளத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆதம் பாவா அப்துல் லதீப் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டிருந்தார்.
விசாரணையின்போது, சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் பலமுறை அங்கிருந்து தப்பியோடியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான், சிறுவனை உடனடியாக சிறைச்சாலைக்கு மாற்ற உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக பின்னர் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








