ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தும் போர் அதிகாரத் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை நேற்று (03) 215-208 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த முடிவு ஜனாதிபதி Donald Trump தலைமையிலான நிர்வாகத்திற்கு முக்கிய அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பாராளுமன்றத்தின் வெளிப்படையான அனுமதியின்றி ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் மூலம் ஜனாதிபதி ட்ரம்ப் அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளை மீறியுள்ளதாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தத் தீர்மானத்திற்கு ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினருடன் இணைந்து ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
போர் அதிகாரச் சட்டத்தின் கீழ், அமெரிக்கப் படைகளை நீண்டகால இராணுவ மோதல்களில் ஈடுபடுத்துவதற்கு காங்கிரஸின் ஒப்புதல் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, ஈரான் தொடர்பான இராணுவ நடவடிக்கைகளில் காங்கிரஸின் அதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாக இந்தத் தீர்மானம் பார்க்கப்படுகிறது.
எனினும், இந்தத் தீர்மானம் சட்டமாக அமலுக்கு வருவதற்கு அமெரிக்க செனட் சபையின் அங்கீகாரமும் தேவைப்படுகிறது. அதன்பிறகும் ஜனாதிபதி ட்ரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை நிராகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டோவை மீறுவதற்கு காங்கிரஸின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் நிலையில், உடனடி கொள்கை மாற்றம் ஏற்படும் சாத்தியம் குறைவாகவே உள்ளது.








