மட்டக்களப்பு குருக்கள் மடப் பகுதியில் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் இடத்தை அகழ்வாய்வு செய்வதற்கான பாதீட்டு வரைபை (Preliminary Budget) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரிக்கும், தொல்லியல் திணைக்களத்துக்கும் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு புதன்கிழமை (22) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த இடத்தில் நீதிமன்ற மேற்பார்வையில் விஞ்ஞான ரீதியான அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி வழக்கு மாநாடு (Case Conference) நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட காணிப் பதிவாளர் மற்றும் மட்டக்களப்பு SOCO (Scene of Crime Officers) பொலிஸ் பிரிவு ஆகிய தரப்புகளுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பான இந்த வழக்கில், சம்பவ இடத்தின் உரிமை, நிலப் பதிவுகள், தொல்லியல் மதிப்பீடு, நீதிமருத்துவ ஆய்வு மற்றும் தடயவியல் விசாரணைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளது.
முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, சம்பவத்தின் உண்மை நிலையை முழுமையாக வெளிக்கொணரும் வகையில் விரைவான அகழ்வாய்வும், நீதிமருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மனிதப் புதைகுழி இருப்பதாக சந்தேகிக்கப்படும் குறித்த பகுதி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதுடன், நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.








