அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குறித்த நிலையத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல’ என்ற பெயரில் இயங்கி வந்த இந்த முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று (03) பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நேர்ந்தபோது அங்கு சுமார் 72 பேர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேவேளை, காயமடைந்த 6 பேர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் தீயில் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (04) முன்னெடுக்கப்பட்டதையடுத்து, சடலங்களை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், விசாரணைகளை விரிவுபடுத்த மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா, அலட்சியம் இடம்பெற்றதா என்பன தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








