கோப்பி பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் அதிக வர்த்தக மதிப்பைக் கொண்ட கோப்பி உற்பத்தியை நாட்டில் மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள், ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய கோப்பி பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோப்பி கன்றுகள் நடப்பட்ட பின்னர் முதல் மூன்று ஆண்டுகள் வரை காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் காப்புறுதித் தொகையின் 7 சதவீதம் பிரீமியமாக செலுத்தப்பட வேண்டும்.
அதன்படி, முதல் ஆண்டில் 510,000 ரூபாய், இரண்டாம் ஆண்டில் 660,000 ரூபாய் மற்றும் மூன்றாம் ஆண்டில் 840,000 ரூபாய் வரை காப்புறுதித் தொகை வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வறட்சி, வெள்ளம், காட்டு யானை தாக்குதல், கட்டுப்படுத்த முடியாத தாவர நோய்கள், பூச்சி தாக்கங்கள் மற்றும் பிற விலங்குகளால் ஏற்படும் சேதங்கள் ஆகியவற்றுக்கு இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
மேலும், காப்புறுதித் தொகையில் 0.5 சதவீதம் கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் திடீர் தீ விபத்துகள் மற்றும் நிலச்சரிவு போன்ற அபாயங்களுக்கும் மேலதிக பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கோப்பி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.








