இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
‘Derana Big Focus’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
டெங்கு நோயாளர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென் மாகாணத்தின் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்திலும் அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மொத்த டெங்கு நோயாளர்களில் சுமார் 80 சதவீதமானோர் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கண்டி மாவட்டங்களிலிருந்து பதிவாகியுள்ளனர்.
‘டித்வா’ புயலைத் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் தொடர்ச்சியான மழைவீழ்ச்சி காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று (05) மேலும் ஒரு டெங்கு மரணம் பதிவாகியுள்ள நிலையில், இந்த ஆண்டின் மொத்த டெங்கு மரண எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஐந்து ஆண்களும், ஏனையோர் பெண்களும் அடங்குவதுடன், மூன்று குழந்தைகளும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 29 டெங்கு மரணங்கள் பதிவாகியிருந்ததாக வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.








