தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டிருந்தால், அது யுத்தக் குற்றமாகக் கருதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், முன்னாள் ஜே.வி.பி தலைவர் ரோஹண விஜேவீரவின் மகனும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் மகனும் பாதுகாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அதேபோன்று, ஆயுத மோதல்களில் ஈடுபடாத சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டியது சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படைக் கொள்கையாகும் என அவர் வலியுறுத்தினார்.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என நிரூபிக்கப்பட்டால், அது யுத்தக் குற்றமாகக் கருதப்பட்டு உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புகள் தொடர்பான உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.








