மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக வாகன விபத்துகளின் அபாயம் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் – போடைஸ் – டயகம பிரதான வீதியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அக்கரப்பத்தனை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், நேற்று இரவு கொழும்பிலிருந்து அக்கரப்பத்தனை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று ஹட்டன் – போடைஸ் – டயகம வீதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்பகுதியில் சுழன்று விபத்துக்குள்ளானது.
எனினும், குறித்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் பயணிக்கும் அனைத்து சாரதிகளும் வேகக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி, முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வாகனங்களை இயக்குமாறு பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.








