கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்து சாரதிக்கு இரண்டு நாட்கள் பணி இடைநிறுத்தம் விதிக்கப்பட்டுள்ளது.
விசுவமடுவிலிருந்து வவுனியா நோக்கிப் பயணிக்கும் தனியார் பேருந்தின் சாரதியே இந்த ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையில், குறித்த சாரதி முரண்பாட்டில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சாரதிக்கு இரண்டு நாட்கள் சேவையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெற்றால் பேருந்தின் வழித்தட அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படும் என அதன் உரிமையாளருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுப் போக்குவரத்து சேவைகளில் இடம்பெறும் ஒழுங்கீனங்கள், பாதுகாப்பற்ற செயற்பாடுகள் மற்றும் சாரதிகள், நடத்துநர்களின் தரக்குறைவான நடத்தைகள் தொடர்பில் பொதுமக்கள் ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை முன்வைக்குமாறும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.








