தமிழகத்தின் தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த முயற்சிக்கப்பட்ட சுமார் 40 லட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான 1,400 கிலோ பீடி இலைகள் மற்றும் 120,000 சிகரெட்டுகள் அடங்கிய பொதிகளை இந்திய கடலோர பாதுகாப்புக் குழுமப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி கடற்பகுதி ஊடாக இலங்கைக்கு பீடி இலைகள், சிகரெட்டுகள், மருந்துப் பொருட்கள், வலி நிவாரண மாத்திரைகள், மஞ்சள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கடலோர பாதுகாப்புக் குழுமப் பொலிஸாரும் கியூ பிரிவு பொலிஸாரும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இனிகோ நகர் கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் கடந்த 14ஆம் திகதி இரவு விசேட ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதன் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றை சோதனையிட்டதில், படகு மூலம் இலங்கைக்கு கடத்தத் தயாராக வைக்கப்பட்டிருந்த 1,400 கிலோ பீடி இலை மூட்டைகள் மற்றும் 120,000 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து, குறித்த பொருட்களும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறியும் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








