எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றிய அவர், நாட்டிலுள்ள சுமார் 15,000 அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதாக தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பு இதுவரை உருவாக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு முறையான ஆட்சேர்ப்பு பரீட்சை, சமமான சம்பள அமைப்பு மற்றும் பதவி உயர்வு முறைமைகள் இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பட்டதாரிகளாக இருந்தும் தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற பதவிகள் வழங்கப்படவில்லை என்றும், குறைந்த தகைமையுடையோரின் கீழ் பணியாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் காலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பெயர் மாற்றப்பட்டதன் மூலம் அவர்களை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டிய அவர், இந்த விவகாரத்தை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், ஓய்வூதியர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புத் தொகைகளுக்கான வட்டி வருமானம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கான விதை, உர மானியங்கள் மற்றும் உத்தரவாத விலைகள் வழங்கப்படாததால் அவர்கள் பொருளாதார சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மீனவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மின்கட்டணக் குறைப்பு, ஊழல் ஒழிப்பு, குறைந்த விலையில் எரிபொருள் வழங்கல் உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிவாரணங்களும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தற்போதைய அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாத நிலையில், நாட்டிற்கு மாற்று அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி உருவெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.








