இணையவழி பணப் பரிமாற்ற முறைகள் ஊடாக வங்கிக் கணக்குகளுக்கு பணம்
பெற்றுக்கொண்டு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர், நீர்கொழும்பு கட்டுவைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கல்கிசை மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
சோதனையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 1 கிலோகிராம் 34 கிராம் ஹேஷ், 7 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 8 கிராம் 860 மில்லிகிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 351,200 ரூபாய் பணம் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இரண்டு கார்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








