நாட்டின் முன்பள்ளிக் கல்வி முறையை தேசிய கல்வி அமைப்புடன் ஒருங்கிணைக்கும் நோக்கில், 2027ஆம் ஆண்டு முதல் அனைத்து மாகாணங்களிலும் சீரான மற்றும் கட்டமைக்கப்பட்ட முன்பள்ளிக் கல்வி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகால சிறுவர் பருவ கல்வி அபிவிருத்தி திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்பள்ளிக் கல்வி, நாட்டின் பரந்த கல்வி அமைப்புடன் இணைக்கப்பட்டு கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
தற்போது இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறை ஒருங்கிணைந்த கட்டமைப்பின்றி இயங்கி வருவதாகவும், அது இன்னும் உத்தியோகபூர்வ அரச சேவையாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், முன்பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தரப்படுத்தப்பட்ட நடைமுறைகளோ அல்லது இத்துறையை மேற்பார்வையிடும் தனித்துவமான நிர்வாக அமைப்போ தற்போது இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை மாற்றும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்கள், நாடு முழுவதும் தரமான மற்றும் நிலையான முன்பள்ளிக் கல்வி முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை, ஆரம்பகால சிறுவர் கல்வியை முறைப்படுத்தி தேசிய கல்வி நீரோட்டத்துடன் இணைக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.








