தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹதராவ குளத்தில் நீராடச் சென்ற 17 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. மொணராகலை பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது நண்பர்களுடன் இணைந்து பஹதராவ குளத்தில் நீராடச் சென்றபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீராடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இது குறித்து தொம்பகஹவெல பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்து சிறுவனை மீட்டு உடனடியாக மொனராகலை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தொம்பகஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








