ரூ.2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயாராக வைத்திருந்ததாக கூறப்படும் கஜமுத்துக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அராவ கரந்தகஹமட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பிபில, மாத்தளை மற்றும் பகமூன பகுதிகளைச் சேர்ந்த 49, 31 மற்றும் 29 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹாலிஎல மற்றும் உடுவர முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஒற்றர் ஒருவரின் உதவியுடன் நேற்று (22) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களின் வசமிருந்த கஜமுத்துக்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு துண்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அராவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








