வங்கி முறைமையுடன் தொடர்புடைய நிதி மோசடிகளால் இலங்கை சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வெளிநாட்டு செலாவணியை இழந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தின் பொது நிதிக்குழு அடுத்த வாரம் மத்திய வங்கி அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தவுள்ளது.
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தொடர்பான சட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், ஜனாதிபதியின் வெளிப்படுத்தலும் முக்கியமாக விவாதிக்கப்படும் என பொது நிதிக்குழுவின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதியின் அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, அடுத்த வாரம் நடைபெறும் குழுக் கூட்டத்தில் அது நிச்சயமாக விவாதிக்கப்படும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 300 பில்லியன் ரூபாய் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் வருமானமும் இந்த சட்டவிரோத நிதி வெளியேற்றத்தில் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியதுடன், பணமோசடி மற்றும் நிதிசார் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் அவசியம் எனவும் வலியுறுத்தியிருந்தார்.








