நாட்டில் அரிசி நுகர்வை உணவுப் பயன்பாட்டிற்கு மட்டும் கட்டுப்படுத்தாமல், அரிசியை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கும் பயன்படுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கெபித்திகொல்லாவ பகுதியில் புதிய நீர்த் திட்டமொன்றை திறந்து வைத்த நிகழ்வில் உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் நெல் உற்பத்தி குறைவாக இருந்ததால் அரிசியை பயன்படுத்தி பிற பொருட்கள் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நெல் அதிகளவில் விளையும் காலங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சந்தை சிக்கல்களை குறைத்து, அவர்களின் விளைபொருளுக்கு போட்டித்தன்மையுள்ள மற்றும் நியாயமான விலையை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கம் எனவும் அவர் விளக்கினார்.
எதிர்காலத்தில் அரிசியை பயன்படுத்தி கால்நடைத் தீவனம், பியர், வைன், பிஸ்கட், கேக் உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அறுவடைக்குப் பிந்தைய விரயத்தைக் குறைக்கும் நோக்கில், அரிசியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கக்கூடிய பல உணவு மற்றும் பான வகைகள் தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைவில் வணிக ரீதியாக சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சியின் மூலம் நெல் கொள்வனவில் பாரம்பரிய அரிசி ஆலைகளுக்கு அப்பாற்பட்டு, கால்நடைத் தீவனம், பானங்கள் மற்றும் உணவுப் பொருள் உற்பத்தியாளர்களும் இணைவதால், விவசாயிகள் தங்களின் அறுவடைக்கு அதிக போட்டி மற்றும் சிறந்த விலையைப் பெறும் வாய்ப்பு உருவாகும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், உருவாகவுள்ள இந்த புதிய சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நெல் உற்பத்தியை அதிகரித்து, பயிர்ச் செய்கையை விரிவுபடுத்துமாறு அவர் விவசாயிகளிடம் அழைப்பு விடுத்தார்.








