மட்டக்களப்பு பாலமீன்மடு மீனவர் எழுச்சி கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக அடிப்படை வசதிகளான குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
பாலமீன்மடுவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவிக்கையில், கடந்த 2000ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மீனவர் எழுச்சி கிராமம் சுனாமி அனர்த்தத்துக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு வாழும் குடும்பங்களுக்கு இதுவரை காணி ஆவணங்கள் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த பகுதி அனர்த்த வலயமாக குறிப்பிடப்படுவது தவறானது எனவும், அந்த மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் அல்லது மாற்றுக் காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
குடிநீர், மலசல கூடம் போன்ற அடிப்படை வசதிகளின்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அதிகாரிகள் உடனடியாக கள விஜயம் செய்து தீர்வு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஏழை மக்களின் காணி பிரச்சினைகளில் சட்ட நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படும் நிலையில், செல்வாக்கு மிக்கவர்களின் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.







