உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதுடன், மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் நாட்டின் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோக நிறுவனங்களில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் தட்டுப்பாடு தொடர்பில் இன்று (14) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் எரிபொருள் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து செயற்படுவது சவாலாக உள்ளதாக சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பை சமாளிப்பதற்கு பல்வேறு மாற்று வழிகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்று அரசாங்கம் தலையிட்டு எரிபொருளுக்கு மானியம் வழங்குவது அல்லது விலை தொடர்பில் மாற்றுத் தீர்மானங்களை மேற்கொள்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தனியார் நிறுவனங்கள் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்துள்ள போதிலும், நுகர்வோரின் நலனையும் கருத்திற்கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு மாத இறுதியிலும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை மறுஆய்வு நடைமுறைக்கு அமைவாக, இம்மாத இறுதியிலும் சர்வதேச சந்தை நிலவரம், மத்திய கிழக்கு சூழ்நிலை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.








