புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ‘ஃபில்கிராஸ்டிம்’ மருந்து இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அரசாங்கத்துக்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (14) நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் மருந்துத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊசி மருந்திலும் உரிய லேபிள்கள் காணப்படவில்லை என்பது கண்டறியப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நோயாளிகளின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி, குறித்த மருந்துத் தொகுதியை ஏற்றுக்கொள்ளாமல் சீனாவுக்கே திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக அரசாங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படாது என தெரிவித்த அமைச்சர், நோயாளிகளுக்கு தேவையான மாற்று மருந்துகளை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், அரச வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய வைத்தியசாலைகளுக்கு உள்ளூர் சந்தையில் இருந்து தரமான மருந்துகளை அவசரமாக கொள்வனவு செய்வதற்கான அதிகாரமும் நிதியும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும், அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக முன்னெடுத்து வருவதாகவும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.







