கடுவலை பிரதான பேருந்து நிலையத்தின் வாரச் சந்தை வளாகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்தொன்றுக்கு இன்று (05) அதிகாலை அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்து தப்பிச் சென்றுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலை வழியாக கடுவலை – மாத்தறை சேவையில் ஈடுபட்டிருந்த குறித்த சொகுசு பேருந்து முழுமையாக தீக்கிரையாகி சேதமடைந்துள்ளது. மேலும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவலை – கொழும்பு கொள்ளுப்பிட்டி வழித்தடத்தில் சேவையாற்றிய இரண்டு சாதாரண சேவை பேருந்துகளுக்கும் தீ பரவியதால் சிறியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணி வரையிலான நேரப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்துக்கு தீ வைப்பதை, அருகில் இருந்த மற்றொரு பேருந்தில் தங்கியிருந்த சாரதி மற்றும் நடத்துநர் கவனித்துள்ளனர். அவர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ வைப்பு நடைபெற்ற வேளையில், தீக்கிரையான சொகுசு பேருந்தின் உள்ளே சாரதி மற்றும் நடத்துநர் உறங்கிக் கொண்டிருந்தனர். அருகிலிருந்தோரின் எச்சரிக்கையை அடுத்து அவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தனிப்பட்ட விரோதம் அல்லது பழிக்குப்பழி நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடுவலை பொலிஸாரின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.








