வடமராட்சி கிழக்கு பகுதியில், 10 வயதுக்குட்பட்ட சிறுவனிடம் பெரியவர்களுக்கான முழு பேருந்து கட்டணத்தை வசூலித்த தனியார் பேருந்து நடத்துனர் ஒருவருக்கு ஒரு வார கால பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடத்தனையிலிருந்து மருதங்கேணி நோக்கிப் பயணித்த சிறுவனிடம், வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கம் மற்றும் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நிர்ணயித்துள்ள கட்டண விதிமுறைகளை மீறி முழுக் கட்டணம் அறவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறுவனின் தந்தை வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்தில் முறைப்பாடு செய்தார். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நடத்துனர் விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, குறித்த நடத்துனருக்கு ஒரு வார காலம் பேருந்து நடத்துனராக பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற கட்டண விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது.








