கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதாகவும், இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கழிவுகள் உரிய நேரத்தில் சேகரித்து அகற்றப்படாததால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதுடன், கடும் துர்நாற்றமும் வீசுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலை தொடருமானால் பாரிய சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக மழைக்காலங்களில் கழிவுகள் தேங்குவதால் கொசுப் பெருக்கம் அதிகரித்து, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வீதியோரங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பாதசாரிகள் பாதுகாப்பாக நடமாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் கல்முனை மாநகர சபையும், சம்பந்தப்பட்ட பொதுச் சுகாதார அதிகாரிகளும் இதுவரை போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே, குவிந்து கிடக்கும் கழிவுகளை உடனடியாக அகற்றுவதோடு, சுற்றுச்சூழல் மற்றும் பொதுச் சுகாதாரத்தை பாதுகாக்க தொடர்ச்சியான, முறையான கழிவு முகாமைத்துவ திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







