சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் விபத்துகள் ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு அப்பால் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகக் கொந்தளிப்பாக காணப்படக்கூடும். மேலும், காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்பகுதிகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வெளியாகும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.








