எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சில வரிகளிலிருந்து விலக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸயில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். “மக்களுக்குச் சில வரிகளால் சுமை ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம். எனவே வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சில வரிகளை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜனாதிபதி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டுக்காகத் தயாரித்துள்ள வரவு செலவுத் திட்டத்தில், மூலதனச் செலவினங்களுக்காக 1,750 பில்லியனும், நேரடி மூலதனச் செலவினங்களுக்காக 250 பில்லியனும் சேர்த்து மொத்தமாக 2,000 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். வீதிகள், பாலங்கள், மின்சாரம், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய அனைத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு, இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகளவு மூலதனச் செலவினங்களைச் செய்யும் ஆண்டாக அடுத்த ஆண்டு அமையும் என்றார்.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தித் திறைசேரியை நிரப்பியுள்ளதாகவும், அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் ஊடாகவே திறைசேரியிலுள்ள பணத்தைக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.








