கால்நடைகள், ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகளை வளர்க்கும் பண்ணை உரிமையாளர்களுக்காக புதிய காப்புறுதித் திட்டமொன்றை கமநலக் காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ் வெள்ளம், சூறாவளி, மின்னல், மண்சரிவு மற்றும் வன விலங்குகளினால் பண்ணை வீடுகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு காப்புறுதி இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
இதன்படி, அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தக் காப்புறுதி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காப்புறுதிக்காக செலுத்த வேண்டிய அடிப்படைக் கட்டணம், தெரிவு செய்யப்படும் காப்புறுதித் தொகையின் 2.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தீ விபத்தினால் ஏற்படும் சேதங்களையும் காப்புறுதிக்குள் உள்ளடக்க விரும்பும் பண்ணை உரிமையாளர்கள் மேலதிகமாக ஒரு சதவீதக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களால் பாதிக்கப்படும் கால்நடைப் பண்ணை உரிமையாளர்களுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








