மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்லூரி சமூகமும் பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த ‘மைக்கல் வோக்’ நடைபவனி இன்று (26) வெகு விமரிசையாக நடைபெற்றது.
‘தளராத மனவுறுதி, தகர்க்க முடியாத பாரம்பரியம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நடைபவனி, கல்லூரியில் இடம்பெற்ற விசேட நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆரம்பமானது.
கல்லூரி வளாகத்திலிருந்து ஆரம்பமான நடைபவனி திருமலை வீதி ஊடாக தாண்டவன்வெளி மற்றும் அரசடி சந்தி வரை சென்று, பின்னர் மீண்டும் கல்லூரியை நோக்கி திரும்பியது.
சாரணிய மாணவர்கள், பாண்ட் குழுவினர் மற்றும் இனியம் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகளுடன் நடைபவனி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புனித மிக்கேல் கல்லூரியின் வரலாறு, பெருமைகள் மற்றும் சாதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் அலங்கார ஊர்திகள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கல்லூரியின் பாரம்பரியத்தையும் சாதனைகளையும் மட்டக்களப்பு சமூகத்திற்கும், இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் எடுத்துரைக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.








