சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி, மட்டக்களப்பில் இன்று (26) கையெழுத்து சேகரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
‘அனோஜனுக்கு கருணை காட்டுவோம்’ என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் இந்த கையெழுத்து சேகரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் உ.உதயகாந்த் தலைமையில், அதன் செயலாளர் ரீ.லெட்சுமிகாந்தனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அனோஜனின் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அந்த முயற்சிகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் சவுதி மன்னருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் கையளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட மகஜருக்கு பொதுமக்களிடம் கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த உ.உதயகாந்த், மனிதாபிமான நடவடிக்கைகளில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தொடர்ந்து பங்கேற்று வருவதாகவும், அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கையெழுத்து சேகரிப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், சர்வமதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரும் மனுவுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 5,000 கையெழுத்துகளைச் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















