முல்லைத்தீவு, வல்லிபுனம் செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (14) மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வை தமிழ்த் தேசியப் பேரவையின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு பிரதிநிதிகள் கலந்துகொண்டு, உயிரிழந்த மாணவிகளின் உருவப்படங்களுக்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது உயிரிழந்த மாணவிகளின் நினைவுகள் நினைவுகூரப்பட்டதுடன், அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பல்வேறு உறுதிமொழிகளும் எடுத்துக்கொள்ளப்பட்டன.
“நாம் மறக்கமாட்டோம்… நாம் மன்னிக்கமாட்டோம்…” உள்ளிட்ட உறுதிமொழிகளுடன் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு, உயிரிழந்த மாணவிகளின் நினைவுகளைப் போற்றும் வகையில் நிறைவடைந்தது.








