இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) புதிய தலைவராக சுரன்ஜித் வேவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராகவும் செயற்பட்டு வரும் சுரன்ஜித் வேவிட்ட, வங்கியியல் துறையின் பல்வேறு பிரிவுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டில் மத்திய மாகாணத்தின் சிறந்த பால் சார்ந்த உபதயாரிப்பு தொழில்முனைவோராக கௌரவிக்கப்பட்ட இவர், உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அனுபவம் பெற்றவராவார்.

கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணவரான சுரன்ஜித் வேவிட்ட, சுற்றுலாத்துறையிலும் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி புதிய பொறுப்பை முன்னெடுக்கவுள்ளார்.
இதனிடையே, இதுவரை SLTDA தலைவராகப் பணியாற்றிய புத்திக ஹேவாவசம், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களால் நேற்று (17) பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரிடம் எழுத்துமூலம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சுரன்ஜித் வேவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.








