வாழைச்சேனையில் நேற்று (17) டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் “டெங்கு அற்ற சமூகத்திற்கு பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா இளைஞர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடவடிக்கை நேற்று (17) காலை இடம்பெற்றது. டெங்கு அபாயப் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றும் வகையில் பல்வேறு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது மதஸ்தலங்கள், வீதியோரங்கள் மற்றும் பொது இடங்களில் காணப்பட்ட திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டதுடன், கால்வாய்களும் சுத்தம் செய்யப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, எம்.எஸ். உதுமான் லெப்பை, ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நளீம், கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எஸ். சுதாகரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
டெங்கு பரவலைத் தடுப்பதற்கு சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவதுடன், நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான இடங்களை உடனடியாக கண்டறிந்து அகற்றுவது அவசியம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.








