கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை பிணையில் விடுவிக்க உதவுவதற்காக இலஞ்சம் கோரியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்ட ஒருவருக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்காக, குறித்த அதிகாரி ஒருவரிடம் ஒரு கிலோ கோழிக்கறி கேட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து கம்பஹா பிரிவு 04க்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் ஆரம்பக் கண்டறிதல்களின் அடிப்படையில் பொலிஸ் சார்ஜன்டை சேவையிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக ஆரம்ப விசாரணைகள் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







