ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகைகள் இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருவரிடமும் கையளிக்கப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குற்றப்பத்திரிகைகள் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குற்றப்பத்திரிகைகளின்படி, 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2007ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கடற்படைத் தளபதியாகப் பதவி வகித்த வசந்த கரன்னாகொட, யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் Royal Navy Young Officers Course பயிற்சியில் பங்கேற்க முறையற்ற வகையில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக வசந்த கரன்னாகொட மீதும், குறித்த நடவடிக்கையின் மூலம் முறையற்ற நன்மையைப் பெற்றதாக யோஷித ராஜபக்ஷ மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இருவருக்கும் எதிராக மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.








