திருநெல்வேலி அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வின்போது, சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவ, மாணவிகள், தொல்லியல் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று (20) பல்வேறு வரலாற்று மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
மருதூர் அணைக்கட்டு, சீவலப்பேரி, மறுகால்தலை பகுதியில் அமைந்துள்ள பழமையான கல்வெட்டு, உழக்குடி அருகேயுள்ள நெடுங்கல், நாட்டார்குளம் நடுகல், ஆதிச்சநல்லூர் மற்றும் கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு இடம்பெற்றுள்ளது.

உழக்குடி அருகே அமைந்துள்ள சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான நெடுங்கல்லை மாணவர்கள் பார்வையிட்டபோது, அதன் அருகில் மாணவர் லட்சுமணன் பானை ஓடு ஒன்றைக் கண்டெடுத்துள்ளார்.
அந்தப் பானை ஓட்டில் அந்துப்பூச்சியை ஒத்த உருவம் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியில் மாணவி பிரியா, கலைநுட்ப வேலைப்பாடுகளைக் கொண்ட பானை மூடியின் உடைந்த பகுதியொன்றையும் கண்டெடுத்துள்ளார்.
இந்த இரண்டு தொல்லியல் பொருட்களும் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தொல்லியல் உதவிப் பேராசிரியர் மதிவாணன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கள ஆய்வில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டியுள்ளார்.








