மட்டக்களப்பு – ஓட்டமாவடி, பிறைந்துரைச்சேனை பகுதியில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் உடல்நலக் குறைவால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் வெள்ளிக்கிழமை (2) மாலை ஒன்றாகச் சேர்ந்து சவர்மா ஓடர் செய்து உட்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, சவர்மா உணவு ஒவ்வாமை காரணமாக மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 14 மாணவிகள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒரு மாணவி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம். நஜீப்கான் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.







