மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இதுவரை காலமும் விவசாயிகள் பயிரிடும் காலங்களில் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை மேய்ச்சல் நிலத்திற்குக் கொண்டு செல்வதுடன், மறுபுறம் அம்பாறை எல்லைப் பகுதியில் விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதால் அங்கு இருதரப்பினரிடையே நீண்ட காலமாக முரண்பாடுகள் நிலவி வந்தன.
இதற்கான நிரந்தரத் தீர்வைப் பெறும் நோக்கில், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய வன வளப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபை ஆகியவற்றின் இணக்கப்பாட்டுடன் அந்தப் பகுதியை மேய்ச்சல் நிலமாக வர்த்தமானியில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே, மீண்டும் பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பித்துள்ளது.
எனவே, அந்தச் செயற்பாடு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
இந்நிலையில், பால் பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் நிலமாக அந்தப் பகுதியை ஒதுக்குவதற்கும், கால்நடைகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் இடம்பெறுவதைத் தடுத்து பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும், அந்த நிலத்தை விரைவில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதேநேரம், அங்கு மேலும் எந்தவொரு முரண்பாடுகளும் ஏற்படாதவாறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மகாவலி வலயத்தில் மாற்றுக் காணிகளை ஒதுக்கி வழங்குவதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
ஆனால், சிலர் இதன் பின்னணியில் இருந்து இனவாத ரீதியில் இதனைக் கொண்டு செல்வதற்கு முற்படுகின்றனர்.
எவ்வாறாயினும், நாட்டில் எந்தவொரு இனவாத மோதல்களுக்கோ அல்லது வன்முறைகளுக்கோ அரசாங்கம் இனி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.








