யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலய திருவிழாவில் அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக கண் பாதிப்புக்குள்ளான 166 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்டவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

வானவேடிக்கைகள் மற்றும் இசை நிகழ்வின்போது பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார் 120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் பாதிக்கப்படக்கூடும் என்பதால், குறித்த பகுதியில் சுகாதாரத் தரப்பினரால் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








