வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி போராடி வரும் தாய்மார்கள், தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலேயே உயிரிழந்து வருவது மிகவும் கவலைக்குரிய விடயம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிக்குழுவின் பிரதிநிதி அனா லோறினா டெல்கடிலோ பெரஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “சர்வதேச நீதியை நோக்கிய பயணம்” என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் நேற்று (30) சர்வதேச மாநாடு நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பல ஆண்டுகளாக உண்மை மற்றும் நீதியை கோரி போராடி வருகின்ற போதிலும், அவர்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும், விடுதலைப் புலிகள் காலம், ஜே.வி.பி. காலம், வெள்ளை வேன் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் காணப்பட்ட போதிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சில தகவல்கள் அதிகாரிகளால் மறைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தமது பணிக்குழு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
உண்மை மற்றும் நீதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளில் தமது பணிக்குழுவின் பங்களிப்பு தொடரும் எனவும் உறுதியளித்தார்.








