யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலகத்தில் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான 37 வயதுடைய நிசாந்தன் சிந்துப்பிரியா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அரச அலுவலகங்களுக்கிடையிலான உற்பத்தித்திறன் போட்டியின் மதிப்பீடு இன்று நடைபெறவிருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடாக அலுவலக வளாகத்தை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் பணிகளில் ஊழியர்கள் நேற்று (30) ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, அலுவலக வளாகத்திலுள்ள மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த குறித்த உத்தியோகஸ்தர், அங்கு காணப்பட்ட மின்சார வயரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சக உத்தியோகஸ்தர்கள் அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








