2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது உரிமங்களை 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாகப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
செல்லுபடியாகும் உரிமம் இன்றி துப்பாக்கியை வைத்திருப்பது துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22ஆவது பிரிவின் கீழ் குற்றமாகும் எனவும் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த காலக்கெடுவுக்குள் துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2026 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறும் தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்கு தாமதக் கட்டணம் அறவிடப்படுவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில், துப்பாக்கி உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னரே தங்களது உரிமங்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.







