நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும், டெங்கு பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவற்றை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர, டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்த பின்னரே சில மாவட்டங்களில் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நுளம்புப் பெருக்கம் தொடர்பில் ஆரம்பத்திலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுப்புறங்களில் தேங்கி நிற்கும் நீர், குப்பைகள் மற்றும் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றுவதுடன், வீடு மற்றும் சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுமாறும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.







