இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட மதிப்பீட்டை முன்னிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த விஜயத்தின்போது அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ள சர்வதேச நாணய நிதியக் குழு, நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் முன்னெடுக்கப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைந்த 7ஆவது மதிப்பாய்வு தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளது.
அத்துடன், 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்புரை IV ஆலோசனைகளும் பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் பெறும் என இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.
விஜயத்தின்போது பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம், நாட்டின் பேரண்டப் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.
மேலும், பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த பின்னர் சர்வதேச நாணய நிதியக் குழுவினால் அறிக்கையொன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவான் பாப்பஜோர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியக் குழு கடந்த ஜூன் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை கொழும்பில் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து, இந்த புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த நிதி ஆதரவு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







