கண்டி, மயிலப்பிட்டிய பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சிறுவர் இல்லத்தின் நிர்வாகியும் அவரது கணவரும் தலாத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் உடல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரவதைக்கு உள்ளான சிறுவன் முதலில் மாரஸ்ஸன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








