குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தாங்கள் செய்த தவறுகளை அறிந்திருப்பதன் காரணமாகவே கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயராமய புராண விஹாரையில் நடைபெற்ற ‘வேஹி பிரித்’ வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் என அஞ்சுவாராயின், அதற்கு முன்னதாகவே ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி கூட்டங்களை நடத்திக்கொள்ளலாம் எனவும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தீர்மானித்தால், அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுவாக்கெடுப்பு அவசியமாகாது என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.







